Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 64

இரக்கமும் துணையும் வேண்டி மன்றாடல் ..............தொடர்ச்சி
1 நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!2 விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்: வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.3 நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்: மலைகள் உம் முன்னே உருகி ஓடின!4 தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.5 மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்: இதோ, நீர் சினமடைந்தீர்: நாங்கள் பாவம் செய்தோம்: நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?6 நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்: எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின: நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்: எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன.7 உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை: உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை: நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்: எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.8 ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.9 ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்: குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்: உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.10 உம் புனித நகர்கள் பாலை நிலமாயின: சீயோன் பாழ் நிலமாயிற்று: எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.11 எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய தூய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில் நெருப்புக்கு இரையாயிற்று: எங்களுக்கு அருமையானவை அனைத்தும் அழிந்து போயின.12 ஆண்டவரே, இவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ? மவுனமாயிருந்து எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!